தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் 28.12.1995 அன்று வெளியிட்ட அறிக்கையில் இருந்து.!

0
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் 28.12.1995 அன்று வெளியிட்ட அறிக்கையை  தட்டச்சு செய்து காலத்தின் தேவை கருதி வேர்கள் இணையத்தில்   வெளியீடு  செய்கின்றோம் .!
இன்று இரத்தம் வழிந்தோடும் எமது மண் நாளை ஒரு சுதந்திர பூமியாக மாறும்.!

வரலாற்று ரீதியாக ஈழத்தமிழினம் ஒரு அப்பட்டமானஇன அழிப்பை எதிர்நோக்கி நிற்கின்றது. தமிழரின் தேசிய அடையாளத்தைச் சிதைத்துவிடும் நோக்கில் மிகவும் நுட்பமாகத் திட்டமிடப்பட்டு இந்த இன அழிப்பு நிகழ்கின்றது. இதன் உண்மையான முகம் பிரச்சாரப் பொய்களால் மூடிமறைக்கப்பட்டிருக்கின்றது. இதனை சர்வதேச சமூகம் இன்னும் புரிந்து கொள்ளாதது எமக்கு வேதனையையும், கவலையையும் தருகின்றது

தமிழின அழிப்பை அடிப்படையாகக் கொண்ட சிங்களஇனவாதத்தின் அடக்குமுறைக்கு எதிராகவே தமிழீழ மக்கள் அன்று தொட்டு இன்று வரை போராட்டங்கள் நடத்திவருகின்றார்கள். எமக்கு முந்திய பரம்பரையினர் அரைநூற்றாண்டு   காலத்துக்கு மேலாக காந்தியடிகளின் அகிம்சைத் தத்துவத்தின் அடிப்படையில் அறவழிப் போராட்டங்களை நிகழ்த்தினர் அறவழிப்போரின் ஆன்மீகப் பண்பியல்பை சிங்கள அரசு உணர்ந்து கொள்ளவில்லை அதற்கு மதிப்பும் அளிக்கவில்லை அகிம்சைப் போராட்டங்களை ஆயுத வன்முறையால் மிருகத்தனமாக நசுக்கியது அறவழியில், சனநாயக வழியில் தொடங்கப்பட்ட போராட்டங்கள் ஆயுத வன்முறையால் நசுக்கப்பட்ட நிலையில், இன அழிப்பு மேலும தீவிரமடைந்து தமிழ் மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை என்ற இக்கட்டான வரலாற்றுக் காலகட்டத்தில்தான் விடுதலைப் புலிகள் இயக்கமும் தமிழரின் ஆயுதப் போராட்டமும் தோற்றம் கொண்டது .
தன்னாட்சி உரிமைகோரி தமிழீழத்தில் தோற்றம் கொண்ட ஆயுதப் போராட்ட வடிவத்தைப் பயங்கரவாதம் என்றும் பிரிவினைவாதம் என்றும் சித்தரித்துவிட சிங்கள அரசு பகீரத முயற்சி செய்கிறது. இத்தகைய தவறான கருத்து இந்திய மக்கள் மத்தியிலும் உலக அரங்கிலும் வருகிறது. இந்தச் சித்தரிப்பில் எவ்வித உண்மையும் இல்லை ஈழத்தமிழரின் போராட்ட வடிவத்தை திரிபுபடுத்தி கொச்சைப்படுத்தும் நோக்கில் இவ்விதம் பொய்ப்பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது .
நாம் பயங்கரவாதிகளும் அல்லர், பிரிவினைவாதிகளும் அல்லர், ஆயுதக் கலாச்சாரத்தை வழிப்படுத்தும் வன் முறையாளரும் அல்லர். நாம் ஒரு இலட்சியத்திற்காக, ஒரு உயரிய குறிக்கோளுக்காகப் போராடுகின்றோம். இன அழிவிலிருந்து எமது இனத்தைப் பாதுகாததுக கொள்வதற்காகவே நாம் போராடுகின்றோம்
இனக்கொலை வடிவம் எடுத்துள்ள ஆயுத வன்முறைக்கெதிராகவே நாம் ஆயுதமேந்திப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். உயிர் வாழும் உரிமைக்காக உயிரைக் கொடுத்துப் போராட வேண்டிய ஒரு சிக்கலான, நெருக்கடியான ஒரு வரலாற்றுச்சூழலை நாம் எதிர்கொண்டு நிற்கின்றோம். இலங்கைத்தீவில் சுதந்திரம் பெற்றதிலிருந்து மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்களப் பௌத்த பேரினவாத அரசுகள் தமிழரை அரவணைத்து வாழ விரும்பாது அடிமைகொண்டு ஆளவிரும்பியதால் தமிழ் மக்கள் தமது அரசியல் தலை விதியை தாமே நிர்ணயித்துக் கொள்ள விரும்பினர். ஒருதேசியக் கட்டமைப்பைக் கொண்ட இனம் என்ற ரீதியில் எமது மக்கள் தன்னாட்சி உரிமைக்கு உரித்தானவர்கள் .அதுவும் அரச ஒடுக்குமுறையானது இனஅழிப்பு வடிவமெடுத்த சூழ்நிலையில்தான் எமது மக்கள் தன்னாட்சி உரிமைக்காகப் போராடத்துணிந்தார்கள்.
நாம் விடுதலையில் பற்றுக்கொண்டு ஒன்றுபட்டு உறுதி கொண்டு நிற்கின்றோம். இன்றைய பின்னடைவுகளை நாளைய வெற்றிகளாக மாற்றிவிடத் திடசங்கற்பம்பூண்டு நிற்கின்றோம். இன்று இரத்தம் வழிந்தோடும் எமது மண் நாளை ஒரு சுதந்திர பூமியாக மாறும் நம்பிக்கை எமக்கு உண்டு.
-தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு வே. பிரபாகரன் அவர்கள்
28.12.1995 அன்று வெளியிட்ட அறிக்கையில் இருந்து
இணைய வெளியீடு :வேர்கள் இணையம் .!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

Leave A Reply

Your email address will not be published.