முள்ளிவாய்க்கால் பார்த்ததுண்டா.!

பதிவுசெய்யப்பட்டது : March 12, 2018

முள்ளிவாய்க்கால் பார்த்ததுண்டா
அந்த கந்தக கடற்கரை வெளியை பற்றி அறிந்ததுண்டா

இங்கே தான் இந்நூற்றாண்டின் மனிதப் பேரவலம் நடந்தேறியதி

இங்கே தான் சர்வதேசத்தின் கோர முகங்கள் திரையிடப்பட்டது

இங்கே தான் பாதுகாப்பு வலையங்கள் எனும் பேரில் கொலைக்களங்கள் அமைக்கப்பட்டன

இங்கே தான் கஞ்சிக்காக காந்திருந்த பாலகரும் பலியான பாவ வரலாறு நிகழ்ந்தேறியது

இங்கே தான் வந்தவரை எல்லாம் வாழவைத்தவர்கள் பசியாலும் பட்டிணியாலும் வதங்கிப்போயினர்

இங்கே தான் இந்த நூற்றாண்டின் மர்மம் குடிகொண்டிருக்கின்றது இருக்கிறாறா இல்லையா என்று

இங்கேதான் என் இனத்தாரின் பிணங்கள் புணரப்பட்டன

இங்கே தான் என் அண்ணன்காள் நிர்வாணமாய் சுடப்பட்டு இறந்தனர்

இங்கே தான் நிலம் காத்தவர் நிழலாகினர்

இங்கே தான் எங்கள் அடிமை சாசனம் எழுதப்பட்டது

இங்கே தான் இந்த உலகின் உன்னத புரட்சி மொளனமாகியது

இங்கே தான் எங்கள் வானம் இருண்டது

இங்கே தான் இறுதியாக வாய்விட்டு அழுதோம் அதன் பின் எங்களுக்கு அழவும் உரிமை மறுக்கப்பட்டது

இங்கே தான் இறுதியாக கந்தகபுகை கலந்த சுதந்திர காற்றை சுவாசித்தோம்

இங்கே தான் நாளை பல அரசியல் நாடகங்கள் நடந்தேற போகிறது

இங்கே தான் நாளை மறுநாள் விதைத்தவை முளைக்கப்போகிறது

ஆக்கம் :தி.த .நிலவன்