வாசலெங்கும் தீப ஒளி.!

வானம், முகில், நிலவும் வந்துலவும் வாடியதும்
வாசலிலே….. நின்று பணியும்
வாரியெடுத் துங்களது மேனியிலே பூவிதழால்
வருடிவிட்டுத் தலைகள் குனியும்.
கானம் இசைத்துவரும் கருங்குயில்கள் உங்களது
கல்லறையில் மெல்ல உருகும்.
காலைமலர் யாவுமுமக் காகவெனப் பூத்தபடி
காத்திருந்து கண்கள் சொரியும்.
மானம், மறம் தமிழர் மரபின் மகுடமெலாம்
மண்டியிட வந்து குவியும்.
மாலைமணி ஆறுவெனக் கோயில்மணி
ஓசையுடன்
மாவிளக்குத் தீபம் ஒளிரும்.
பாணரென நாமிருந்து பாட்டிசைக்க உம்முகங்கள்
பால்பருகி மெல்ல விரியும்.
பார்த்திருக்கும் எங்களது மேனியெல்லாம்
வேர்த்தொழுகப்
பாதைதெளி வாகத் தெரியும்.
தாயாளின் மடிவிட்டுத் தவழ்ந்திட்ட மண்மீது
தணியாத அன்பு என்றவர்.
தாலாட்டில் மயங்காது தமிழீழப் போர்ப்பாட்டின்
தமிழ் மீது வெறிகொண்டவர்.
பாய்கின்ற நதியாகிப் பகைதன்னைப் பலியாக்கிப்
பணியாதோர் எனச் சொன்னவர்.
பகைஎரும் வழியெங்கும் புலியாகி எதிர்கொண்டு
பல வீரக்களம் நின்றவர்.
சாயாதெம் தமிழ்வீரம் தளராதெம் நடையென்று
சமராடி உயிர் விட்டவர்.
சந்திரனும், சூரியனும் தாள்பணியத் தக்கதொரு
சரித்திரமாய் வான் தொட்டவர்.
தேயாதோர் உறங்குகின்ற திருவிடத்தில்
பூச்சொரிந்து
தீபஒளி ஏற்று தினமே.
தேடியவர் கல்லறைக்குப் போயிருந்து
கண்சொரியத்
தேவநிலை ஆகும் மனமே.

 

கவியாக்கம் :– புதுவை இரத்தினதுரை.!

வெளியீடு : எரிமலை இதழ் நவம்பர் 2000

மீள் வெளியீடு :வேர்கள் இணையம் 

மாவீரர் நாள்  சிறப்பு  பதிவிலிருந்து வேர்கள்.!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

Leave A Reply

Your email address will not be published.